Monday, April 14, 2014

மனைவிக்குத் தேவை சகிப்புத் தன்மை!

சுன்னத்தான இல்லறம்: 

அரபியில் ஒரு சொல்: ஹில்ம்! இதற்கு மென்மை - Gentleness; இரக்கம் - Clemency; சகிப்புத் தன்மை Forbearance என்றெல்லாம் பொருள் படும்.

இந்த குணத்தை உடையரைக் குறிப்பிடும் – ஹலீம் – என்ற சொல்லுக்கு மென்மையானவர், சாந்த குணம் உடையவர், இரக்க குணம் உடையவர், சகிப்புத்தன்மை உடையவர் என்று பொருள் கொள்ளலாம். .
அல்லாஹு தஆலாவுக்கு அல்-ஹலீம் என்ற பெயரும் உண்டு. மிக்க பொறுமை உடையவன் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. .

இந்த ஹில்ம் எனும் அருமையான பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் – ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள்! ( பார்க்க இறைவசனங்கள் 9: 114 மற்றும் 11:75)

அதே போன்று ஹள்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களும் இந்த அருங்குணத்துக்குச் சொந்தக்காரராக விளங்கினர்கள். இஸ்மாயில் (அலை) அவர்களை – “குலாமுன் ஹலீமுன்” (சகிப்புத்தன்மை உடைய குழந்தை) என்று குறிப்பிடுகிறான் வல்லோன் அல்லாஹ். (பார்க்க இறை வசனம் 37: 101).

சற்றே உற்று நோக்கினால் அன்னை ஹாஜரா அவர்களிடத்திலும் இந்தப் பண்பு நிறைந்து காணப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்னை ஹாஜரா அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை சற்றே அசைபோட்டுப் பாருங்கள். புரியும்.

சகிப்புத் தன்மை உடையவராக அன்னை ஹாஜரா அவர்கள் விளங்கியதால் தானோ என்னவோ சகிப்புத் தன்மை உடைய இஸ்மாயில் எனும் குழந்தையை அவர் பெற்றெடுக்கின்றார்.

ஒட்டு மொத்தத்தில் இந்தக் குடும்பமே – ஹில்ம் – எனும் சகிப்புத்தன்மைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்திருக்கின்றது.

அதைப்போலவே – தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது!

பார்க்க ஹதீஸ்: (புகாரி ஹதீஸ் எண் 3364)

இஸ்மாயில் (அலை) அவர்களின் முதல் மனைவியிடம் இந்த சகிப்புத் தன்மை இல்லை! அந்த மனைவி "நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்; நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிடுகிறார்! அந்த மனைவியை "மாற்றி விடுமாறு" மறைமுகமாகச் சொல்லி விட்டுச் செல்கிறார் இப்ராஹிம் (அலை) அவர்கள்.

இஸ்மாயில் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவி சகிப்புத் தன்மை உடையவராக விளங்குகிறார். அவர், இப்ராஹிம் (அலை) அவர்களிடம் "நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்" என்று சொல்கிறார்; உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்கிறார்! எனவே இந்த மனைவியை "நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; மாற்றிட வேண்டாம்" என்று மறைமுகமாக அறிவித்துச் சென்று விடுகிறார்கள்.

இந்த ஹதீஸ் தரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் – இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனின் மனைவியாக வரக்கூடியவர் சகிப்புத் தன்மை உடையவராகத் தான் இருந்திட வேண்டும் என்பதை வஸிய்யத்தாகவே தன் மகனுக்கு ஆக்கிச் சென்றிருக்கின்றார்கள்.

நன்கு கவனியுங்கள்:

தன் மனைவி ஹாஜரா அவர்களைப் போலவே தன் மகனின் மனைவியும் சகிப்புத்தன்மை உடையவராக விளங்கிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது ஏன்?

தன் சந்ததியில் உள்ள நல்லோர்களுக்கு – தலைமைப்பொறுப்பு வழங்கப்படும் என்ற இறைவன் வாக்களித்திருந்தனால் (பார்க்க இறை வசனம் 2: 124) அந்த சந்ததிகளைப் பெற்றுத் தரும் தாய்மார்களிடம் இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது – இந்த ஹில்ம் எனும் ஒரே ஒரு நற்பண்பை மட்டுமே!

நபி இப்ராஹிம் அலை அவர்களின் துஆ (பார்க்க இறை வசனம் 2: 129) வையும் - சேர்த்துப் பார்த்தால் - ஹள்ரத் இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும், குறிப்பாக - எதிர்காலத்தில் வர இருக்கின்ற அந்த இறைத்தூதரைப் - (முஹம்மத் ஸல் அவர்களைப்) - பெற்றெடுக்கும் - தாய்மார்களுக்கும் - இந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

நபியவர்கள் ஹில்ம் எனும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கின்றோம்.

அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் சகிப்புத் தன்மை உடையவர்களே!

நவீன ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில் – ஆண் குழந்தைகள் தாயின் குணத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுமாம். பெண் குழந்தைகள் தந்தையின் குணங்களை அப்படியே காப்பியடிக்குமாம்.

தந்தையின் குணங்களை மகள்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்ற ஆய்வு அன்னை பாத்திமா அவர்கள் விஷயத்தில் அப்படியே ஒத்துப் போகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பாத்திமா ரலி அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை – இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.

அன்னை பாத்திமா அவர்களின் இந்த சகிப்புத் தன்மை அவர்களது குழந்தைகள் ஹஸன் மற்றும் ஹுஸைன் – இருவரது வாழ்விலும் பிரதிபலிப்பதை அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலும் நாம் காண்கிறோம்.

நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் - ஒரு பெண் சகிப்புத் தன்மை உடையவராக இருந்தால் – அவருடைய சந்ததி நன்றாக விளங்கும். சகிப்புத்தன்மை உடைய தாய்மார்களின் குழந்தைகளே நல்ல தலைவர்களாக உருவாவார்கள்.

எனவே -

இளைஞிகளே! பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், இரக்க குணத்தையும் - உங்கள் குணங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

இளைஞர்களே! சகிப்புத் தன்மை உள்ள பெண்ணையே தேர்ந்தெடுத்து மணம் முடியுங்கள்!

பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் உள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள்!

No comments:

Post a Comment